குறுக்கெழுத்து பற்றிய ஒர் கவிதை

யாராலாவது
தீர்க்கப்பட்டபடி இருக்கின்றன
புதிர்க் கட்டங்களின்
அவிழாத புதிர்கள்.

இருளால் அடைக்கப்பட்டுச் சில.
புதிரால் நிரப்பப்பட்டுச் சில.
இடமிருந்து வலம்செல்கையிலோ
மேலிருந்து கீழிறங்குகையிலோ
கண்ணுக்குப் புலப்படுகிறது
புதிர்களின் சில முடிச்சு.

அவிழாத முடிச்சுகளைத்
தீர்ந்த விடை கொண்டு
தேடுகையில் உடைகிறது
மற்றும் சில.
காத்திருக்கின்றன
முட்டையினுள்ளே
கீழிருந்து மேலாகவோ
வலமிருந்து இடமாகவோ
தலைகீழாயோ
திரும்பியபடியோ
முடிவுறாமலோ.

ஒவ்வொன்றாய் உதிர்கையில்
முளைக்கிறது விடைகளுடன்
வாழ்வின் ஞானம்.

புதிரின் பிடி அவிழ்ந்து
பூரித்து நிமிர்கையில்
புதிதாய்த் தயாராகிறது
இருள் நிறைந்த கட்டங்களுடன்
இன்னுமொரு சதுரம்.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ் Original source: http://www.eegarai.net/t52059-topic#ixzz26H9da8GD

குறுக்கெழுத்து - 1

அன்பு நண்பர்களே, இன்று முதல் தினம் ஒரு குறுக்கெழுத்து பதிவிட திட்டமிட்டிருக்கிறேன். ஒரு சில தினங்களில் தடங்கல் ஏற்பட்டாலும் முடிந்தவரை தினசரி புதிரைத் தருவதாகத் திட்டம். இதுவரை ஹரி பாலகிருஷ்ணன் அவர்களில் ஆப்லெட் கொண்டே புதிர்களை வெளியிட்டு வந்தேன். புது முயற்சியாக ஜாவா-ஸ்கிரிப்ட் மூலம் புதிர்களை விளையாட  அழைக்கிறேன்.

 

உங்களின் மேலான ஆலோசனை, மற்றும் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

சங்கேத குறுக்கெழுத்து - விளக்கம், குறுக்கெழுத்து கேள்விகளுக்கான விடை காணல்

ஆங்கிலத்தில் cryptic crosswords மிகவும் பிரபலமாக இருப்பினும் தமிழில் இந்த வகைப் புதிர்கள் அரிதினும் அரிதாகவே வருகின்றன. இவை பற்றிய விளக்கத்தை ஏற்கனவே திரு வாஞ்சிநாதன் (தென்றல் எனும் ஆன்லைன் பத்திரிகையில் இவரது சங்கேத குறுக்கெழுத்துகள் மாதாமாதாம் வெளிவருகின்றன) பார்த்தசாரதி ஆகியோர் ஏற்கனெவே எழுதிவிட்டார்கள், இந்தத் தளத்திற்காக நானும் எழுதுகிறேன்.

ஒரு பூவின் பெயர், நதியின் பெயர் என்பதை விட வார்த்தை ஜாலங்கள், சிலேடைகள், நகைச்சுவை நிறைந்த குறுக்கெழுத்துப் போட்டி எனில் சுவராசியம் கூடத்தானே செய்யும். இந்த வகை புதிர்கள் பார்க்க மலைப்பாக இருந்தாலும் அவிழ்க்க அவிழ்க்க தெவிட்டாத இன்பமாக அமையும். மேலும் குறுக்கெழுத்தில் ஏற்கனவே ஒன்றிரண்டு எழுத்துக்களை கண்டுபிடித்துவிட்டால் மீதி எழுத்துக்களை கொண்டு இந்த வகை கேள்விகளை அணுகும்போது அவ்வளவு கடினமாக இராது.

இரு சொல் அலங்காரம்

கடைக்குப் போனவன் கீழே விழுந்து சாம்பாரில் போட வாங்கி வந்தது (6)
(பெருங்காயம்)

எருமைக் கன்று அழுவதேன் எருக்க இலை பழுப்பதேன்? (2,4,3) -
(பால் வற்றிப் போனால்).

அந்த பெண் தந்தையை (4)
(அப்பாவை)

அந்தத் தவறு செய்தவன் குற்றவாளி சூதுவாது தெரியாதவன் (4)
அப்பாவி

விடை கேள்வியிலேயே தெரிதல்.

கேள்வியில் ஒரு பகுதியிலேயே விடை அமைந்து வருவது ஒரு ரகம், பெரும்பாலும் இது எளிதாகவே இருக்கும்.

ஒரு வருசம் பாதிப்பினால் வருமானம் ஈட்டு (4)
சம்பாதி (வருமானம் ஈட்டு)

ஐஸ்வர்யா ரோபோ படத்தில் எவரோ (2)
யாரோ (எவரோ)

பர்பி சின்னதாயிருந்தாலும் ருசி நாவில் ஒட்டிக்கொள்ளும் (3)
பிசின் (ஒட்டிக்கொள்ளும்)

எழுத்து நீக்குதல் / குறைத்தல்

பெண் பார்வை மெய்யை எடுத்தது (2)
பார்வை எனும் சொல்லிலிருந்து மெய்யை மட்டும் எடுத்தால் கிடைப்பது பெண் என்பதற்கு இன்னொரு சொல் பா_வை.

நதிக்கரை ஓரங்களில் வெளுத்தது (2)
ஒரங்களில் அல்லது சுற்றிலும் என்றால் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் கருத வேண்டும். நதிக்கரை ஓரங்களில் இருக்கும் எழுத்துகள் ந மற்றும் ரை. வெளுத்தது எனில் நரை தானே.

போய்ப் பார் முழுமதியில்லை (3)
மதியின் என்பதன் வேறொரு வார்த்தை (சந்திரன்) என்பது முழுதாக இல்லை என்றால் (சந்தி) போய்ப் பார் என்பதற்கான விடை வரும்.

மச்சி இடுப்பை வெட்டி அரை. (2)
மச்சி இடுப்பை எடுத்தால் மசி, அது அரை என்னும் பொருள்தானே.

எழுத்துக்களை மாற்றுதல் / சேர்த்தல்

மனுஷி இடையை கரியாக்கிய மாமுனி. (4)
மனுஷி - எனும் வார்த்தையில் இடையிலிருப்பது னு - இதை கரி என்று மாற்ற ம - கரி - ஷி என்பது விடையாகக் கிடைக்கும். மாமுனி என்வரை மகரிஷி எனலமே.

வானிலிருந்து வந்த ஒன்று வில்லில் வைத்த விழி திருப்பியது (4)
வில்லில் வைத்த விழி - வில் எனும் இதனுள் (கண் )விழி எனும் வார்த்தையை திருப்பி வைத்தால் (கவனிக்கவும் கேள்வியில் திருப்பியது என்ற சொல்லும் வந்துள்ளது) வி - ண்க - ல் என்பது வானிலிருந்து வந்த ஒன்று தானே.

சொல்கலை + இரண்டு மூன்று வார்த்தைகள்

இன்று திருமணமானவள் முதல் புருஷனுடன் மதுவினை கலக்குகிறாள். (2,3)
முதல் புருஷன் என்பதால் புருஷனின் முதல் எழுத்தை மட்டும் கருத வேண்டும். அதனுடன் மதுவினை கலக்க => பு + மதுவினை => புதுமனைவி என்பது விடையாகும்.

பழமொழி, சொற்றொடர்கள் கொண்ட கேள்விகள்

இந்த வகை கேள்விகள் ஏதேனும் ஒரு பழமொழியை அடிப்படையாகக் கொண்டு, அதனைத் திருகி எடுக்கப்பட்டவை.

உழக்காவது மிஞ்சும்படி கணக்குப் பார்க்கத் தெரியாத கணக்கர்.(5)
உழக்கு, கணக்கு என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பழமொழி - உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது. இங்கே கணக்குப் பார்க்கும் கணக்கர் உழுதவன் தானே.

எண்ணெய் கொண்டு வந்த நல்ல வேலையாளிடம் கேட்ட தானியம்.(2)
நல்ல வேலையாள் எப்படி இருக்க வேண்டும், எள் என்றால் எண்ணெயாக இருக்க வேண்டும், அப்படியானால் கேட்ட தானியம் 'எள்'

இவை இரண்டுக்கும் ஒரு சேர ஆசைப்பட முடியாதாம்.(2,2)
இரண்டின் மேல் ஒரே நேரத்தில் ஆசைப்படுவர்களுக்கு அறிவுரையாகும் பழமொழி நினைவுக்கு வந்தால் விடை கிடைத்துவிடும், (கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை), எனவே விடை கூழ்,மீசை

குறுக்கெழுத்து - தமிழ் தட்டச்சு செய்வது எப்படி

ஆங்கில விசைப்பலகை (கீ-போர்டு) பயன்படுத்தி நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம்.  

 

க என டைப் செய்ய ka  என டைப் செய்யுங்கள். அதே போல
சா என டைப் செய்ய  caa அல்லது cA என டைப் செய்யுங்கள்.
 
பஞ்சு என டைப் செய்ய pa - nj - cu என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு காம்பினேஷன் டைப் செய்யவேண்டும்.